< Back
மாநில செய்திகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
22 Feb 2024 10:56 PM IST

கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு.. பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும். சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக சட்டசபையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். இதன்பின்னர், பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நேற்றையதினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில், பா.ஜ.க. கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமையவிருக்கிறது? எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள்? எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்துக்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.

மதுரையில் எவ்வாறு உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும்.

ஆனால், வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்