< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

மதுரை: சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 95 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி, ரூ. 1 லட்சம் கொள்ளை - வடமாநில கும்பல் கைவரிசை

தினத்தந்தி
|
18 Sept 2022 9:27 PM IST

சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள குமார்நகரில் வசிப்பவர் பிரபுசங்கர் (வயது 45) . இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக பணிபுரிந்து வருவதுடன் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவில் வசித்து வருவதால் மேலூரில் உள்ள வீட்டு மாடியை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதற்கிடையே பிரபுசங்கரின் மாமனார் எம்.கே.பாலகிருஷ்ணன் இன்று ஓய்வு எடுக்க இந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உடனடியாக மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த 6 மர்ம நபர்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் பின் பக்க ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 95 பவுன் தங்க நகை, 45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 1.10 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்