36 ஆண்டுகளாக தலையாரியின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்காத அதிகாரிகளின் செயல் மனிதாபிமானமற்றது - சென்னை ஐகோர்ட்டு
|36 ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியத்தை மறைந்த தலையாரியின் குடும்பத்துக்கு வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளின் செயல் மனிதாபிமானமற்றது என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடும்ப ஓய்வூதியம்
சென்னை மாம்பலம்-கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக வேலை செய்த டி.எஸ்.பெருமாள், 1987-ம் ஆண்டு பணியில் இருந்தபோது காலமானார். இதையடுத்து, குடும்ப ஓய்வூதியம் கேட்டு அவரது மனைவி ஜெயா கொடுத்த மனுவை பரிசீலிக்கும்படி தாசில்தாருக்கு, அப்போதைய சைதாப்பேட்டை சப்-கலெக்டர் 1987-ம் ஆண்டும், சென்னை மாவட்ட கலெக்டர் 1989-ம் ஆண்டும் உத்தரவிட்டுள்ளனர். அதன்பின்னரும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்காததால், 2004-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ஜெயா வழக்கு தொடர்ந்தார்.
துரதிருஷ்டவசமான வழக்கு
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, 2017-ம் ஆண்டு குடும்ப ஓய்வூதியம் வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாவட்ட கலெக்டர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த ஐகோர்ட்டுக்கு மற்றொரு துரதிருஷ்டவசமான வழக்காக இந்த வழக்கு அமைந்துள்ளது. 2004-ம் ஆண்டு வழக்கு தொடரும்போது ஜெயாவுக்கு 55 வயது என்றும், 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கும்போது 70 வயதை நெருங்கி விட்டார். ஆனாலும் குடும்ப ஓய்வூதியத்தில் ஒரு பைசா கூட அவர் பெறமுடியவில்லை என்று தீர்ப்பில் தனி நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
குழப்பம் ஏற்படும்
இப்படி கூறிய பின்னரும், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை மற்றும் காஞ்சீபுரம் கலெக்டர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஜெயா இறந்து விட்டதால், அவரது மகன் பி.நதீஸ்பாபு எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். இது ஒரு பரிதாப நிலையாகும்.இந்த வழக்கில், 1987-ம் ஆண்டு சைதாப்பேட்டை சப்-கலெக்டர், 1989-ம் ஆண்டு சென்னை கலெக்டர் பிறப்பித்த உத்தரவுகள் வலுவூட்டும் விதமாக இருந்தாலும், தற்போது தலையாரி பெருமாளின் குடும்ப ஓய்வூதியத்தை சரிபார்த்து வழங்குவது சென்னை கலெக்டரா?, காஞ்சீபுரம் கலெக்டரா? என்ற குழப்பம் ஏற்படும்.
ஏன் அலைக்கழிப்பு?
தனி நீதிபதி தீர்ப்பில் கூட குடும்ப ஓய்வூதியத்துக்காக இந்த ஏழை பெண் இத்தனை ஆண்டுகளாக அங்குமிங்கும் ஏன் அலைக்கழிக்கப்படுகிறார்? என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று வேதனைப்பட்டுள்ளார். கணவர் இறந்து 36 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த 36 ஆண்டுகளாக இந்த விதவை மனைவி வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியத்துக்காக போராடி, சட்டப்படியான ஓய்வூதியத்தைக்கூட பெற முடியாமல் இறந்துள்ளார். இப்போது பெருமாள்-ஜெயா ஆகியோரது மகன் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் இப்போது வயது 60 ஆகிறது. இதுபோன்ற ஒரு நிலை எந்த ஒரு அரசு ஊழியரின் குடும்பத்துக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது.
மனிதாபிமானமற்ற செயல்
அரசு பணியில் முக்கிய முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டிய அதிகாரிகள், பொறுப்பை தட்டிக் கழிப்பதும், கடமையில் இருந்து தவறுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அதிகாரிகளின் செயலால், ஏழை அரசு ஊழியரின் மனைவி 36 ஆண்டுகளாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு ஓய்வூதிய தொகைக்கூட அந்த பெண்ணுக்கு கிடைக்கக்கூடாது என்பது போல செயல்பட்டுள்ள அதிகாரிகளின் செயல் சட்டவிரோதமானது. தன்னிச்சையானது. எங்களை பொறுத்தவரை ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறோம், அதிகாரிகளின் செயல் 'மனிதாபிமானமற்றது'.
யார்?
1987-ம் ஆண்டு முதல் சென்னை கலெக்டர் உள்ளிட்ட உயர் பதவிகளில் பலர் இருந்துள்ளதால், இந்த செயலை செய்த அதிகாரி யார்? என்பதை முடிவு செய்ய முடியவில்லை. அதனால், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை ஒரு மாதிரி வழக்காக எடுத்துக் கொண்டு, அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய பலன்களை விரைவாக வழங்க வழிமுறையை உருவாக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம். 8 வாரத்துக்குள் குடும்ப ஓய்வூதிய பண பலன்களை பி.நதீஸ்பாபுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.