< Back
மாநில செய்திகள்
கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன?பட்டியலிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன?பட்டியலிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
19 Aug 2023 12:15 AM IST

கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்னென்ன? என்று பட்டியலிட்டு மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பனைக்குளம்,

கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களுக்கு செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்னென்ன? என்று பட்டியலிட்டு மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மீனவர் நல மாநாடு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நேற்று நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீனவர்கள் நல மாநாட்டை நடத்த உள்ளதாகவும், அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் விடுத்த அன்பான அழைப்பை ஏற்று நான் இங்கே வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு மாநில தலைமை மீன் வளக்கூட்டுறவு இணையமும், மீனவ சங்கங்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவ சங்கங்களை இணைத்துக் கொள்ளமாட்டார்கள். மீனவ அமைப்புகள் நடத்தும் மாநாடாக இருந்தால் அதில் அரசு அதிகாரிகள் இடம்பெற மாட்டார்கள். ஆனால் இங்கே இரண்டு தரப்பையும் இணைத்து இந்த மாநாட்டை அமைச்சர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளில்..

இந்த 2 ஆண்டு காலத்தில் மீன்வளத்துறையில் மட்டும் நம்முடைய ஆட்சி செய்திருக்கின்ற சில சாதனைகளை உங்களிடத்தில் தெரிவிக்கிறேன்.

மீன்வளத்துறையின் பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றினோம். மீன்பிடி குறைவுக்கால நிவாரணத்தை உயர்த்திேனாம். 1 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் இதனைப் பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வள இளங்கலைப் படிப்பில் மீனவ மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம்.

காணாமல் போகும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகையை 250 ரூபாயில் இருந்து ரூ.350 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம். இயற்கை மரணமடையும் மீனவர் நல வாரிய உறுப்பினர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி இருக்கிறோம். மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுத்திடவும், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், கடல் அரிப்பு தடுப்புச்சுவர்களையும், மீன்பிடி இறங்கு தளங்களையும், தூண்டில் வளைவுகளையும் அமைத்து கொடுத்திருக்கிறோம்.

மாநில அரசின் பங்களிப்பு நிவாரணம்

கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் மூலம் 14 கடலோர மாவட்டங்களை சார்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு நிவாரணமாக 62 கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் மூலமாக 2 லட்சம் மீனவ மகளிர் பயன்பெற்று வருகிறார்கள்.

மீனவர்களுக்கு மிக முக்கியமான தேவை டீசல்.. மீன்பிடி விசைப்படகுகளுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் லிட்டர், நாட்டுப் படகுகளுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் லிட்டர் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசலை நம்முடைய அரசு வழங்கி வருகிறது.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுடைய எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப் படகுகளுக்கு எந்திரங்கள் வாங்குவதற்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்க 127 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 42 மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மொத்தம் ரூ.431 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு என்னால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், கடற்கரைப் பாதுகாப்பு, அரசு மீன்பண்ணை கட்டுமானம் மற்றும் அலுவலக கட்டுமானம் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்