திருவள்ளூர்
மடவிளாகம் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
|மடவிளாகம் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் அருகே மடவிளாகம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. சிதிலமடைந்த இக்கோவிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
முன்னதாக நேற்று காலை கணபதி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை நிர்மாணம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் ,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை கோ பூஜை, மஹா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கும்ப புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை சரியாக 8.30 மணி அளவில் கோபுர கலசம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம்,பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடவிளாகம் கிராம பொதுமக்களும்,கோவில் நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.இன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.