திண்டுக்கல்
ஆடு, கோழிகளை கடித்து குதறிய வெறிநாய்கள்
|பழனி அருகே ஆடு, கோழிகளை வெறிநாய்கள் கடித்து குதறின.
வெறிநாய்கள் அட்டகாசம்
பழனி அருகே உள்ள சப்பளநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான தோட்டத்து வீடுகள் உள்ளன. இங்கு விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழிகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக தோட்டத்து பகுதியில் ஆடு, கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதாவது கழுத்தில் ஏதோ விலங்கு கடித்த காயம் போன்று இருந்தது. இதனால் என்னவோ ஏதோ? என விவசாயிகள் அச்சம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்ற விவசாயியின் தோட்டத்தில் 3 ஆடுகள், 2 கோழிகள் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தன. மேலும் ஆடுகள் இறந்த பகுதியில் பெரிய கால்தடம் இருந்தது. இதைக்கண்ட விவசாயிகள் சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் வனவிலங்கு தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, கோழிகளை கடித்து இருக்குமோ? என பீதி அடைந்தனர்.
வனத்துறை சோதனை
இதற்கிடையே ஆடு, கோழிகள் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் ஜெயசீலன் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை டாக்டர் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பின்னர் இறந்த ஆடு, கோழிகளின் காயங்களை கால்நடை மருத்துவ குழுவினர் பார்வையிட்டனர். அதில், வெறிநாய்கள் கடித்ததில் ஆடு, கோழி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வெறிநாய்கள் கூட்டமாக சேர்ந்து ஆடுகளை கடித்துள்ளது. மற்றபடி சிறுத்தை நடமாட்டம் பற்றிய எவ்வித அறிகுறியும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.