ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: அருவிகளில் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
|ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க 37 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பென்னாகரம்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 16-ந்தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் பரிசல்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது.
இந்த சூழலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஆற்றில் குளிக்க 37 நாட்களாக விதிக்கப்பட்டு இருந்த தடை நேற்று விலக்கி கொள்ளப்பட்டது. காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் நேற்று அனுமதி அளித்ததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒகேனக்கல் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நிலையில், இன்று 7,000 கன அடியாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.