சென்னை
குறைந்த சம்பளம், 12 மணிநேரம் வேலை: 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
|தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.
பெரம்பூர்,
சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் பாரிமுனை, மண்ணடி, சவுகார்பேட்டை, யானைகவுனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகள், அழகு சாதன பொருட்கள், ஓட்டல்கள், டீ கடை உள்ளிட்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், 14 வயதில் இருந்து 17 வயது வரை உள்ள 7 குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பது தெரிந்தது. அவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், இங்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை வாங்கி கொண்டு குறைந்த ஊதியம், போதி உணவு வழங்கவில்ைல என்பதும் தெரிந்தது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 7 பேரையும் ராயபுரத்தில் உள்ள அரசு சிறுவர் காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும் சிறுவர்களை வடமாநிலத்தில் இருந்து அழைத்துவந்து குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்களை குழந்தை நலத்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.