< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு

தினத்தந்தி
|
17 July 2024 7:41 AM IST

தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.

சென்னை,

தக்காளி, வெங்காயம் ஆகிய இந்த 2 காய்கறி விலை ஏற்றம், இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்யும். அந்த வகையில் தக்காளி விலை கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதிக்கு பிறகு விலை அதிகரித்து காணப்பட்டது.

அப்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.100-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின்னர் விலை சற்று குறைந்து, இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 முதல் 40 வரை விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கூட ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதன் விலை 'கிடுகிடு'வென அதிகரித்து காணப்பட்டது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்து இருந்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது.

சில்லரை கடைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் ரூ.70 முதல் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்பட்டதையும், சில இடங்களில் சதம் அடித்ததையும் பார்க்க முடிந்தது.

தக்காளி விலையை போல, பச்சை மிளகாய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட மிளகாய், நேற்று கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது.

இதேபோல், கேரட், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து இருந்தது. தக்காளி வரத்து இருக்கக் கூடிய கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்து இருப்பதால், விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரக்கூடிய நாட்களில் மழை இருக்கும் பட்சத்தில், தக்காளி விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்