வரத்து குறைவு எதிரொலி: சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் விலையும் உயர்வு
|வரத்து குறைந்ததின் எதிரொலியாக தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை,
அண்டை மாநிலங்களில் பெய்யும் தொடர் மழையால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை உச்சமடைந்து வருகிறது. தக்காளி போலவே சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்ந்து வருகிறது. இதேபோலவே பெரும்பாலான காய்கறி விலையும் கொஞ்சம் உயர்ந்தே காணப்படுகிறது.
நேற்று முன்தினத்தை காட்டிலும் சாம்பார் வெங்காயம் விலை நேற்று ரூ.20 உயர்ந்திருக்கிறது. பச்சை மிளகாய் விலை ரூ.10 உயர்ந்திருக்கிறது. இதர காய்கறி விலை ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகரித்திருக்கிறது. அதேவேளை பீன்ஸ் விலை குறைந்துள்ளது. காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை எப்போது சீராகும்? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
விலை பட்டியல்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/சில்லரை விலையில்)
பல்லாரி வெங்காயம்- ரூ.20 முதல் ரூ.24 வரை, தக்காளி- ரூ.80 முதல் ரூ.95 வரை, நவீன் தக்காளி- ரூ.110, உருளைகிழங்கு- ரூ.35 வரை, சாம்பார் வெங்காயம்- ரூ.120 முதல் ரூ.140 வரை, ஊட்டி கேரட்- ரூ.50 முதல் ரூ.60 வரை, பெங்களூரு கேரட்- ரூ.20, பீன்ஸ்- ரூ.60 முதல் ரூ.80 வரை, ஊட்டி பீட்ரூட்- ரூ.40, கர்நாடக பீட்ரூட்- ரூ.25, சவ்சவ்- ரூ.23, முள்ளங்கி- ரூ.35, முட்டை கோஸ்- ரூ.20, வெண்டைக்காய்- ரூ.40, உஜாலா கத்திரிக்காய்- ரூ.40, வரி கத்திரி- ரூ.35, காராமணி- ரூ.60, பாகற்காய்- ரூ.55, புடலங்காய்- ரூ.30, சுரைக்காய்- ரூ.30, சேனைக்கிழங்கு- ரூ.48, முருங்கைகாய்- ரூ.50, சேமகிழங்கு- ரூ.40, காலிபிளவர்- ரூ.35, வெள்ளரிக்காய்- ரூ.30, பச்சை மிளகாய்- ரூ.90 முதல் ரூ.100 வரை, பட்டாணி- ரூ.190, இஞ்சி- ரூ.260, பூண்டு- ரூ.120 முதல் ரூ.180 வரை, அவரைக்காய்- ரூ.50, மஞ்சள் பூசணி- ரூ.15, வெள்ளை பூசணி- ரூ.16, பீர்க்கங்காய்- ரூ.40, எலுமிச்சை- ரூ.35, நூக்கல்- ரூ.55, கோவைக்காய்- ரூ.30, கொத்தவரங்காய்- ரூ.30, வாழைக்காய்- ரூ.10, வாழைதண்டு- ரூ.60, வாழைப்பூ- ரூ.20, பச்சை குடைமிளகாய்- ரூ.50, வண்ண குடைமிளகாய்- ரூ.180, கொத்தமல்லி (கட்டு)- ரூ.6, புதினா- ரூ.3, கருவேப்பிலை- ரூ.20, கீரை வகைகள்- ரூ.12, மாங்காய்- ரூ.35, தேங்காய்- ரூ.26.