அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்
|தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் (நவம்பர்) தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டியது.
இதனையடுத்து அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த 2 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.