< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 March 2023 3:12 AM IST

காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இவர்களது 3 மாத கைக் குழந்தை பெற்றோரை இழந்து தவிக்கிறது.

காதல் திருமணம்

திருவாரூர் மாவட்டம் சோத்தக்குடி பகுதியை சேர்ந்த சிவனேசன் மகன் சுபாஷ்(வயது 25). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகள் அஷ்டலட்சுமியை(20) காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ், அஷ்டலட்சுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

தனியாக வசித்து வந்தனர்

திருமணத்திற்கு பிறகு சோத்தக்குடியில் உள்ள அஷ்டலட்சுமியின் தாயார் வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுபாஷ், எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சுபாஷ் வீடு திரும்பினார். இதன்பின்னர் சுபாஷ்-அஷ்டலட்சுமி தம்பதியினர் நன்னிலத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

மனைவி தூக்கில் தொங்கினார்

இந்த நிலையில் சுபாஷ், தினமும் மது குடித்து விட்டு வந்து அஷ்டலட்சுமியிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அஷ்டலட்சுமி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் நீண்ட நேரமாக கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான் அஷ்டலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவது தெரிய வந்தது.

கணவரும் தற்கொலை

இந்தநிலையில், வேலைக்கு சென்று இருந்த சுபாஷ் வீட்டுக்கு வந்தார். தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். திடீரென வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அருகில் உள்ள பருத்திக் கொல்லைக்கு சென்று அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

தகவல் அறிந்து வந்த நன்னிலம் போலீசார் கணவர், மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்து தவிக்கும் கைக்குழந்தை

கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 3 மாத கைக்குழந்தை ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்து தவித்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்