அரியலூர்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
|காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் எழில்நகரை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் முத்துமுகமது (வயது 28). இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். திருப்பூர் மண்ணரை பி.வி.நகரை சேர்ந்த ராஜாராம் என்பவரது மகள் திவ்யபாரதி (21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். முத்துமுகமது திவ்யபாரதியை பெண் கேட்டதற்கு திவ்யபாரதியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் தரப்பு பெற்றோர்கள் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் முத்துமுகமதுவும், திவ்யபாரதியும் கடந்த 26-ந்தேதி நாகூர் தர்காவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை அங்கேயே பதிவும் செய்து கொண்டனர். இந்நிலையில் ஊருக்கு திரும்பினால் பெண்ணின் பெற்றோர்களால் பிரச்சினை வரும் என நினைத்த புதுமண காதல் ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இருதரப்பு பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பெண் தரப்பு பெற்றோர்கள் தங்களது விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் கோபமடைந்து சென்றனர். இருப்பினும் முத்துமுகமது மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள், அவரது நண்பர்களுடன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களிடம் அறிவுரைகள் கூறினர். பின்னர் புதுமண தம்பதிகளை முத்துமுகமது உறவினர்கள், நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோர்கள் இடையூறு செய்தால் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுரைகூறி அனுப்பி வைத்தனர்.