< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காதல் ஜோடி தற்கொலை

தினத்தந்தி
|
11 Aug 2022 3:22 AM IST

நாங்குநேரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்தார். காதலி தூக்குப்போட்டு இறந்தார்.

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவருடைய மனைவி சரஸ்வதி (47), மகன் உதயசங்கர் (20), மகள் சுதா (22). இதில் சுதா, நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லூரி மாணவியான சுதா நாங்குநேரியை சேர்ந்த தனது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையா (24) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுப்பையாவின் அண்ணன் 2 பேர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதனால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பையா உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று பிற்பகல் நாங்குநேரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டி சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றிருந்தனர்.

காதலன் சுப்பையா விஷம் குடித்து உயிரிழந்ததால் சுதா வாழ்க்கையில் வெறுப்படைந்தார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தொங்கினார். மாலையில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது சுதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அறிந்த அவருடைய உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய சுதாவை கீழே இறக்கி நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி அங்கு சென்று விசாரணை நடத்தினார். சுதா உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி இதுகுறித்து விசாரித்தார். மாலையில் சுதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் தற்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட உருக்கமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மேலும் செய்திகள்