< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை: சிப்காட் போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை: சிப்காட் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
2 Nov 2023 10:49 PM IST

புதுமண தம்பதிகளை கொலை செய்த, கொலையாளிகளை கைது செய்வதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிசெல்வம்(வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாரிசெல்வம், கார்த்திகாவை அழைத்துச் சென்று கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அதன்பிறகு கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து புதுமண தம்பதிகள் 2 பேரும் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு இன்று காலையில் காதல் தம்பதியினர் முருகேசன்நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனையறிந்து மாரி செல்வத்தின் வீட்டுக்கு இன்று மாலை வந்த மர்ம நபர்கள், மாரிச்செல்வம்- கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் திருமணம் செய்ததால் கார்த்திகாவின் உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா, அல்லது வேறு யாரேனும் கொலை செய்து உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்