< Back
மாநில செய்திகள்
காதல் ஜோடி தற்கொலை... பேசாமல் இருந்ததால் விபரீத முடிவு
மாநில செய்திகள்

காதல் ஜோடி தற்கொலை... பேசாமல் இருந்ததால் விபரீத முடிவு

தினத்தந்தி
|
21 July 2024 7:09 AM IST

காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெம்மகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் அருள்வினித் (வயது 28). இவர் வேங்கடகுளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தார். ஆலங்குடி அருகே உள்ள கைக்குறிச்சி ஊராட்சி பூமத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி (23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் புவனேஸ்வரி அருள்வினித்தை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அவரிடம் நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

இதைக்கேட்டு பதறிப்போன அருள்வினித் உடனடியாக புவனேஸ்வரி வீட்டிற்கு விரைந்து சென்றார். ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லாததை கண்டு பரிதவித்தார். பின்னர் வீட்டிற்குள் பார்த்த போது புவனேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் புவனேஸ்வரியை தூக்கில் இருந்து இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மனமுடைந்த அவர், அங்கிருந்து புறப்பட்டு வேங்கிடகுளம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள்வினித் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்