கள்ளக்குறிச்சி
விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி
|சின்னசேலம் பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சின்னசேலம்
பெற்றோர் எதிர்ப்பு
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் நவீன்குமார் (வயது 25). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த இருவரது பெற்றோரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். மேலும் வீட்டை விட்டு வெளியேற அவர்கள் முடிவு செய்தனர்.
வீட்டை விட்டு ஓட்டம்
அதன்படி நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் உள்ள நவீன்குமாரின் உறவினர் பால்ராஜ் வீட்டில் தங்கினர். இதற்கிடையே சிறுமியின் தந்தை ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தேடுவதை பற்றி அறிந்த பால்ராஜ், இருவரையும் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்த பஸ்சில் ஆத்தூருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
விஷம் குடித்த ஜோடி
அந்த பஸ், சின்னசேலம் பஸ் நிலையத்தில் நின்றதும் பால்ராஜிக்கு தெரியாமல் நவீன்குமார் தனது காதலியுடன் பஸ்சில் இருந்து வேகமாக இறங்கினார். பின்னர் அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்று விஷத்தை வாங்கி இருவரும் குடித்து விட்டனர். இதில் இருவரும் பஸ் நிலையத்திலேயே மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையே பஸ் புறப்பட தயாரான போது காதல் ஜோடி இல்லாததை பார்த்த பால்ராஜ் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அங்கு நவீன்குமார் மற்றும் அந்த சிறுமி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்ராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பரபரப்பு
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.