< Back
மாநில செய்திகள்
வேலை தேடும் இணையதளம் மூலம் மலர்ந்த காதல்; தென் கொரியா இளைஞரை கரம்பிடித்த தமிழ்ப்பெண்
மாநில செய்திகள்

வேலை தேடும் இணையதளம் மூலம் மலர்ந்த காதல்; தென் கொரியா இளைஞரை கரம்பிடித்த தமிழ்ப்பெண்

தினத்தந்தி
|
19 May 2024 5:44 PM IST

தென் கொரியாவைச் சேர்ந்த இளைஞர் தமிழ்நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டம் நடையனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் படிப்பு முடிந்து வேலைக்காக பெங்களூரு சென்றபோது, லிங்கிட்-இன்(Linked-in) என்ற வேலைவாய்ப்பு தேடும் இணையதளத்தில் தனது சுயவிவரங்களை பதிவு செய்துள்ளார். மேலும் விஜயலட்சுமிக்கு கொரியா மற்றும் ஜப்பானிய மொழிகள் தெரியும் என்பதால், அந்த தகவலையும் தனது சுயவிவரத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தென் கொரியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வரும் மின்ஜுன் கிம் என்பவர் விஜயலட்சுமியின் சுயவிவர பதிவுகளை இணையதளத்தில் பார்த்து அவரை தொடர்பு கொண்டுள்ளார். இதன் பின்னர் வேலை சம்பந்தமாக இருவரும் சுமார் 6 மாதங்கள் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இதையடுத்து கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விஜயலட்சுமியை தென் கொரியாவுக்கு வருமாறு மின்ஜுன் கிம் அழைத்துள்ளார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், விஜயலட்சுமி கடந்த மார்ச் மாதம் தென் கொரியாவுக்கு சென்று மின்ஜுன் கிம்மின் பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் விஜயலட்சுமி-மின்ஜுன் கிம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் விஜயலட்சுமி தனது பெற்றோரிடமும் மின்ஜுன் கிம் குறித்து பேசி திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இதன் பின்னர் திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கின. திருமணத்திற்காக தென் கொரியாவில் இருந்து மின்ஜுன் கிம் தனது பெற்றோருடன் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.

இதைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் நடையனூரில் விஜயலட்சுமி-மின்ஜுன் கிம் ஜோடியின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இந்தியாவிலேயே இருக்க திட்டமிட்டுள்ளதாகவும், தனது கணவருக்கு நீண்ட கால விசா பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்