சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு நிறுத்தம்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம்
|சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பதை நிறுத்தியதை கண்டித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த தகவல் தெரிவிக்கும் ஒலிபெருக்கி சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையத்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் நல சங்கம் சார்பில் இதனை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் வந்தனர். பின்னர் அங்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
பின்னர் நிருபர்களிடம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் நல சங்க தலைவர் சிங்கார வேலன் கூறியதாவது:-
சென்டிரல் ரெயில் நிலையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்போதைய காலக்கட்டம் வரை பாமர மக்கள் தொடங்கி எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் வரை அனைவரையும் வரவேற்றது, 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு' என்ற வாசகம் தான். ஆனால் கடந்த சில நாட்களாகவே அந்த சத்தத்தை மட்டுமல்ல எந்தவித சத்தமும் கேட்க முடியாமல் ரெயில் நிலையமே மயான அமைதியாக மாறிவிட்டது.
இதனால் எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டோம்.
பயணிகள் காத்திருப்பு அறையில் இருப்பவர்களுக்கு ஒலிப்பெருக்கியால் வரும் சத்தம் இரைச்சலை ஏற்படுத்துகிறது. ஒலி மாசுபடுவதை குறைப்பதற்காகதான் ரெயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
விமான நிலையத்தை பின்பற்றியே சென்டிரல் ரெயில் நிலையத்தை அமைதி ரெயில் நிலையமாக மாற்ற தெற்கு ரெயில்வே முடிவெடுத்தது. விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ரெயில் நிலையத்தில் எங்களுக்கு எந்தவித உதவியாளரையும் நியமிக்கவில்லை. ரெயில்வே நிர்வாகத்துக்கு எங்கள் நலன் மேல் எந்தவித அக்கறையும் இ்ல்லை.
ரெயில் நிலையங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கான பணி பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்குதான் வழங்கப்பட்டு வந்தது. அந்த பணியை எங்களுக்கு வழங்காமல் இருப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் சென்டிரல் ரெயில் நிலையத்தை அமைதி ரெயில் நிலையமாக மாற்ற முயற்சிப்பதாக கருதுகிறோம். இது மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் செயலாகும். ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பை மீண்டும் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமேலாளர் விடுப்பில் இருப்பதால் இது தொடர்பாக நாளை(புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.