தர்மபுரி
அரூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது: ரூ.53 ஆயிரம் பறிமுதல்
|அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஈச்சம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ஈச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜுனன் (வயது 44) என தெரியவந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் அவர் வைத்திருந்த ரூ.53 ஆயிரத்து 360 தொகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்லிகார்ஜுனனை கைது செய்தனர். அவருக்கு லாட்டரி சீட்டுகள் எங்கிருந்து கிடைத்தன? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.