வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்பு - நிவாரண தொகையை உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவு
|இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்
சென்னை,
வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித-வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மனித-வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன.
மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்கள் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.