< Back
மாநில செய்திகள்
ஒன்றிணைந்து போட்டியிடா விட்டால்நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும்முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி
நாமக்கல்
மாநில செய்திகள்

ஒன்றிணைந்து போட்டியிடா விட்டால்நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும்முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

தினத்தந்தி
|
21 May 2023 12:30 AM IST

ஒன்றிணைந்து போட்டியிடா விட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரபாகரன், மனோஜ்பாண்டியன், புகழேந்தி, அழகுராஜ், சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சேலத்தில் நாங்கள் விரைவில் மாநாடு நடத்த உள்ளோம். அதற்காக மாவட்டம் வாரியாக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம். முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கம் இப்போது பிரிந்து கிடக்கிறது. 2 அணிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றிணைய வேண்டும். அப்படி இணைந்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இணையாமல் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி அடையும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் கமிஷன் தான் அறிவித்துள்ளது. இன்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வர உள்ளது. அதில் எங்கள் அணிக்கே சாதகமான தீர்ப்பு வரும். இப்பவும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று தேர்தல் ஆணையமோ, கோர்ட்டோ கூறவில்லை. இந்த நிலையில் தான் அ.தி.மு.க. கொடியை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். சில இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

அரசியல் அனாதை

கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துவந்தால் அது அவர் ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றிக்கடன். இல்லையென்றால் அவரை ஒதுக்கிவிட்டு நாங்கள் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்போம். அரசியல் அனாதை என முன்னாள் அமைச்சர் காமராஜ் என்னை கூறியுள்ளார். அரசியலில் அனாதை என்பது அரசியல் பற்றி தெரியாதவர்கள் சொல்வது. அரசியலில் அனாதை என்பதை சொல்ல அவருக்கு தகுதி இல்லை.

மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக இது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அதிகமாக கருப்பு பணம் வைத்து உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்