மேல்மருவத்தூர் அருகே லாரி வேன் மோதி விபத்து - 2 பேர் பலி
|மேல்மருவத்தூர் அருகே லாரி வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேல்மருவத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் இன்று காலை 5 மணி அளவில் சென்னை நோக்கி வந்துள்ளனர். அப்போது சோத்துப்பாக்கம் அருகே உள்ள இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதியது.
இதைத்தொடர்ந்து லாடி-ஆம்னி பஸ் இணைந்து பின்னோக்கி சென்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 16க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கீழ்க்கடுங்காலூரை சேர்ந்த பரசுராமன் (வயது 40), அண்ணாமலை (65) ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.