திருச்சி
கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய லாரி டிரைவர் உயிருடன் மீட்பு
|கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய லாரி டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மாந்துறையை சேர்ந்தவர் தினேஷ் மார்ட்டின் (வயது 44). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் லால்குடி அருகே கூகூர் என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இருந்த பாதை வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மணல் குவாரிக்காக போடப்பட்டு இருந்த பாதை தண்ணீரில் மூழ்கி இருந்தது. சிறிதுதூரம் நீச்சல் அடித்து கிளிக்கூடு பகுதிக்கு சென்று விடலாம் என்று நினைத்த தினேஷ்மார்ட்டின் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்தார். அப்போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட அவர் அங்குள்ள புற்களை பிடித்து கொண்டு உயிருக்கு போராடினார். இதை கண்ட ஒருவர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் லால்குடி தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்து ரப்பர் படகு மூலம் சென்று லாரி டிரைவர் தினேஷ்மார்ட்டினை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.