காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே ஆம்னி பஸ் மோதி லாரி டிரைவர் பலி
|காஞ்சீபுரம் அருகே ஆம்னி பஸ் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், முள்ளகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 47), லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று கன்டெய்னர் லாரியை எடுத்துக்கொண்டு வேலூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி என்ற இடத்தில் வந்தபோது லாரியின் டயர் பஞ்சர் ஆகி உள்ளதா என்று கீழே இறங்கி டயரை பார்த்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்த ஆம்னி பஸ் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்த ஓசூரை சேர்ந்த பக்கிரிசாமி (63) என்பவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.