திருவள்ளூர்
லோடு வாகனம் மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி - போலீசார் விசாரணை
|மண் லோடு ஏற்றி வந்த லாரி மின்கம்பி மீது உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 48). இவர் திருவள்ளூரை சேர்ந்த கோபி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் கடந்த 4 வருடமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வேலூரில் உள்ள மணல் குவாரியில் இருந்து மணல் லோடு ஏற்றிக்கொண்டு நாராயணபுரம் வந்தார். அப்போது அவர் மணலை கொட்ட முயன்று டிப்பர் லாரியை இயக்கினார். அப்போது அந்த வழியாக தாழ்வாக சென்ற மின்கம்பி மீது லாரி உரசியதில், லாரியின் மீது மின்சாரம் பாய்ந்தது.
அதில் உள்ளே அமர்ந்திருந்த தசரதனை மின்சாரம் தாக்கியதால், அவர் பலத்த காயமடைந்தார். இதைக்கண்டு அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.