திருவள்ளூர்
திருவாலங்காட்டில் கோவில் குளத்தில் மூழ்கி லாரி டிரைவர் சாவு
|திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது குளத்தில் மூழ்கி லாரி டிரைவர் இறந்தார்.
லாரி டிரைவர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 35). இவர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஜனா என்ற 5 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி அனிதா சீக்கிரம் உடல்நலம் குணமடைய திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு ராஜேஷ்குமார் மகன் ஜனா, மாமியார் பிரேமா மற்றும் மனைவியின் தங்கை சரளா ஆகியோருடன் நேற்று சாமி தரிசனத்திற்கு வந்துள்ளார். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலின் பின்பகுதியில் அமைந்துள்ள திருக்குளத்தில் ராஜேஷ்குமார் குளிக்க சென்றுள்ளார்.
குளத்தில் மூழ்கினார்
அப்போது படிக்கட்டில் குளித்துக் கொண்டிருந்த ராஜேஷ்குமார் திடீரென கால் தவறி குளத்தில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்க முயன்றும் முடியாததால், இது குறித்து திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி ராஜேஷ்குமார் உடலை மீட்டு திருவாலங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜேஷ்குமார் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியான சம்பவம் திருவாலங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.