சென்னை
பட்டினப்பாக்கத்தில் கடலில் மூழ்கி லாரி டிரைவர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்
|பட்டினப்பாக்கத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்த போது லாரி டிரைவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 23). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து லாரியில் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தார்.
நேற்று காலை காய்கறிகளை கோயம்பேடு சந்தையில் இறக்கிவிட்டு மதியம் 2 மணியளவில் பட்டினம்பாக்கம் சென்ற கோபி, அங்கு தனது நண்பர்களுடன் கடலில் குளித்து விளையாடினர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய கோபி உள்பட 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு, உடனடியாக மீட்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர் மீட்பு படையினரின் உதவியுடன் கடலில் மூழ்கிய 3 பேரில், 2 பேர் மீட்கப்பட்னர். அவா்கள் அதிக அளவு தண்ணீர் குடித்ததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கோபியை மட்டும் மீட்க முடியவில்லை. கடலில் மாயமான கோபியை தேடும் முயற்சி தீவிரமானது.
இந்தநிலையில் பட்டினம்பாக்கம் நம்ம நெய்தல் உணவகத்துக்கு எதிரே உள்ள கடற்கரையில் கோபியின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.