செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே லாரி டிரைவர் மர்மச்சாவு
|மதுராந்தகம் அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
லாரி டிரைவர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 48). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் இருந்து நாமக்கல் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். இந்த நிலையில் தனியார் நிறுவன உரிமையாளர், லாரி டிரைவரின் மனைவியை தொடர்பு கொண்டு, உனது கணவர் லாரியை எடுத்து சென்று 2 நாட்கள் ஆகியும் வயர்களை இறக்க வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
மர்மச்சாவு
அவருடைய மனைவி, என்னுடைய கணவர் வீட்டுக்கு வரவில்லை என்று தனியார் நிறுவன உரிமையாளரிடம் கூறியதாக தெரிகிறது. லாரி மற்றும் டிரைவரை தேடிய நிலையில் லாரி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. லாரியில் டிரைவர் சேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.