சேலம்
புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி
|வாழப்பாடி அருகே சாலையோர புளியமரத்தில், ஜல்லி பாரம் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே சாலையோர புளியமரத்தில், ஜல்லி பாரம் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
புளியமரத்தில் மோதியது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து, டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் பாரம் ஏற்றிக் கொண்டு கல்வராயன்மலை கருமந்துறை நோக்கி ஓட்டி சென்றார். அதே பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில் அவருடன் சென்றார்.
இந்த லாரி, வாழப்பாடி அடுத்த சந்திரப்பிள்ளை வலசு கிராமத்தில் பேளூர்- அயோத்தியாப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர புளியமரத்தில் பலமாக மோதி நின்றது.
டிரைவர் பலி
இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் இடிபாடுகளில் சிக்கி பிரகாஷ், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இவருடன் லாரியில் சென்ற ஆண்டியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.