கரூர்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஐ.டி. நிறுவன ஊழியர் பலி
|கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஐ.டி. நிறுவன ஊழியர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
லாரி மோதல்
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஜான்டேவிட்ராஜ் (வயது 23). தஞ்சாவூரை சேர்ந்தவர் அருண் (23). நண்பர்களான, இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு ஜான்டேவிட்ராஜ், அருண் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.மோட்டார் சைக்கிளை ஜான்டேவிட்ராஜ் ஓட்டினார். அருண் பின்னால் அமர்ந்து வந்தார். கரூர் வீரராக்கியம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை திருமுருகன் நகரை சேர்ந்த ெரங்கநாதன் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக ஜான்டேவிட்ராஜ், அருண் ஆகியோர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
ஒருவர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு ஜான்டேவிட்ராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அருண் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.