< Back
மாநில செய்திகள்
லாரி-கார் பயங்கர மோதல்: அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலி
மாநில செய்திகள்

லாரி-கார் பயங்கர மோதல்: அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலி

தினத்தந்தி
|
22 Dec 2022 8:44 PM GMT

ஆத்தூர் அருகே லாரி-கார் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வையகவுண்டர்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி முத்துராஜ். இவருடைய மகன் பால் முத்துபிரபு (வயது 39). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

திருவேங்கடம் அருகே சம்பாகுளத்தைச் சேர்ந்தவர் சற்குண பாண்டியன் மனைவி சுதா சற்குணலில்லி (37). இவரும், பால் முத்துபிரபுவும் அண்ணன்-தங்கை ஆவர். சற்குண பாண்டியனின் குழந்தைகளுக்கு திருச்செந்தூர் கோவிலில் முடிகாணிக்கை செலுத்த திட்டமிட்டனர்.

லாரி-கார் மோதல்

இதனால் நேற்று காலையில் சற்குண பாண்டியனின் உறவினர்கள் அனைவரும் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கோவிலில் முடி காணிக்கை செலுத்திய பின்னர் மதியம் அனைவரும் காரில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். காரை பால் முத்துபிரபு ஓட்டினார்.

மதியம் 2 மணியளவில் ஆத்தூர் அருகே பழையகாயலை அடுத்த புல்லாவெளி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் கல்லாமொழிக்கு சென்ற லாரி எதிர்பாராதவிதமாக காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த பால் முத்துபிரபு, அவருடைய தங்கை சுதா சற்குணலில்லியின் மாமியாரான தமிழ்செல்வி (63) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுதா சற்குணலில்லி உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுதா சற்குணலில்லி பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்