< Back
மாநில செய்திகள்
மண் லாரிகள் எழுப்பும் புழுதியால் பொதுமக்கள் அவதி
திருப்பூர்
மாநில செய்திகள்

மண் லாரிகள் எழுப்பும் புழுதியால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
27 Jan 2023 11:45 PM IST

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக தொடர்ச்சியாக இயக்கப்படும் மண் லாரிகள் எழுப்பும் புழுதியால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக தொடர்ச்சியாக இயக்கப்படும் மண் லாரிகள் எழுப்பும் புழுதியால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு வழிச்சாலை

பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விரைவாக நடந்து வருகிறது.

பணிக்காக அதிக அளவில் மண் மற்றும் சரளைக்கற்கள், ஜல்லிக்கற்கள் போன்றவை தேவைப்படுகிறது. இதற்காக பெரிய அளவிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. வட மாநிலத் தொழிலாளர்களால் இயக்கப்படும் இந்த லாரிகள் குறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

லாரி சிறைப்பிடிப்பு

இந்தநிலையில் உடுமலையையடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சி ஆறுமுகம் நகர் பகுதியை ஒட்டி மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

'விவசாயிகள்,பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த சாலை உருவாக்கப்பட்டது. அதிகபட்சம் 10 டன் எடை வரை மட்டுமே தாங்கக்கூடிய கிராமத்து சாலையில் 50 டன்னுக்கு மேல் எடையுடன் கூடிய கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலையில் பல இடங்களில் சேதமடைந்து மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது. அதை சீரமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது மண் கொட்டி பள்ளங்களை மூடினார்கள்.

சுவாசக்கோளாறுகள்

தற்போது லாரிகள் வேகமாக செல்லும்போது அதிக அளவில் மண் புழுதி பறக்கிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் புழுதி படிந்து மாசடைகிறது. அத்துடன் மண் புழுதியை தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய நிலையால் பல்வேறு விதமான சுவாசக்கோளாறுகள் ஏற்படுகிறது. புழுதியால் விளைநிலங்களிலுள்ள பயிர்கள் பாழாகிறது. இலைகளில் தூசி படிவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. வாழைத்தார்களில் புழுதி படிந்திருப்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள்.

எனவே லாரிகளில் மண்ணை மூடிக்கொண்டு செல்லவேண்டும். உடனடியாக சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வேகத்தில் இயக்குவதைத்தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்பந்ததாரர்கள் ஒத்துக் கொண்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்