திருப்பூர்
செங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
|மடத்துக்குளம் பகுதியில் செங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மடத்துக்குளம் பகுதியில் செங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
விதி மீறல்கள்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளக்கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்களை கொண்டு செல்வது, போலியான ஆவணங்கள் மூலம் கொண்டு செல்வது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்வது என பலவிதமான விதிமீறல்கள் நடைபெற்று வருகிறது.
செங்கல் சூளைக்கு முறைகேடாக மண் கடத்தப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இத்தகைய விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வருகிறது.
3 பேர் கைது
நேற்று காலை மடத்துக்குளத்திலுள்ள செங்கல் சூளைக்கு உரிய ஆவணங்கள் மற்றும் அரசு அனுமதி இல்லாமல் விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டிய வண்டல் மண்ணை கடத்தி வந்த 3 லாரிகளை உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் பறிமுதல் செய்தார். மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் லாரி டிரைவர்களான உடுமலை தாலுகா தினைக்குளத்தைச் சேர்ந்த முருகவேல் (வயது 25), ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) மற்றும் பழனி தாலுகா புஸ்பத்தூரைச் சேர்ந்த காத்தமுத்து (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர்.