நாமக்கல்
எருமப்பட்டி அருகே சிதம்பரேஸ்வரர் கோவிலில்சிவலிங்கம் மீது விழுந்த சூரிய கதிர்கள்
|எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் கரை போட்டான் ஆற்றின் கரையோரத்தில் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோவிலில் சிவன் கிழக்கு பார்த்தும், சிவகாமி அம்பாள் தெற்கு பார்த்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கோவில் நுழைவுவாயிலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று காலை 6.30 மணிக்கு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி கதிர்கள் விழுந்து பரவசத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்களிலும் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுந்து சிவனை தரிசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.