< Back
மாநில செய்திகள்
ரூ.1,600 கோடி உற்பத்தி இழப்பு;கட்டுமான பணிகள் பாதிப்பு
திருப்பூர்
மாநில செய்திகள்

ரூ.1,600 கோடி உற்பத்தி இழப்பு;கட்டுமான பணிகள் பாதிப்பு

தினத்தந்தி
|
3 July 2023 4:34 PM GMT

9-வது நாளாக நடைபெறும் கல்குவாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.1,600 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் ஆகியவை ஈடுபட்டுள்ளனர். இதன்படி கடந்த 9 நாட்களாக பல்லடம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட, கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை.

மேலும் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த 9-வது நாளாக நடக்கும் கல்குவாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு சுமார் ரூ.90 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 அம்ச கோரிக்கைகள்

இது குறித்து திருப்பூர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசென்ஸ் வழிமுறைகளை எளிதாகக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்கவில்லை. இங்கு கல் குவாரி தொழில் தடை ஏற்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்து பல மடங்கு விலை உயர்வில் தான் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை வாங்க முடியும்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இ்ல்லை

தற்போது கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. அதனால் வேறு வழியின்றி வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகிறோம். அரசு கல்குவாரி தொழிலுக்கு முறையான வழிகாட்டுதல் வழங்கி தடையின்றி தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தையும் காப்பாற்ற முடியும். ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை. விரைவில் அழைக்கப்படுவோம் என நம்புகிறோம்.

கட்டுமான பணிகள் பாதிப்பு

உறுதியாக இப்போது உள்ள கடுமையான சூழலில் கல்குவாரி தொழிலை நடத்தவே முடியாத நிலையில் தவித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுதும் தினமும் ரூ.200 கோடி என்ற அளவில் சுமார் ரூ.1,600 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு கட்டிட பொறியாளர் சங்கங்கள், ஹாலோ பிளாக் உற்பத்தியாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே கல்குவாரி வேலை நிறுத்தப்போராட்டத்தால், எம்.சாண்ட், ஜல்லி கற்கள், ரெடிமிக்ஸ் கான்கிரீட் உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் கட்டுமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்