< Back
மாநில செய்திகள்
ஒரே நேரத்தில் 6 லாரிகளில் சென்ற நீளமான காற்றாலை மின்விசிறிகள்
கரூர்
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் 6 லாரிகளில் சென்ற நீளமான காற்றாலை மின்விசிறிகள்

தினத்தந்தி
|
9 Jan 2023 12:15 AM IST

தவிட்டுப்பாளையம் வழியாக ஒரே நேரத்தில் 6 லாரிகளில் சென்ற நீளமான காற்றாலை மின்விசிறிகளால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

6 லாரிகள் ஒன்றாக வந்தன

சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து சுமார் 320 அடி நீளத்தில் காற்றாலை மின்விசிறிகளை 6 லாரிகளில் ஏற்றி கொண்டு மதுரை பகுதிக்கு ெசன்று கொண்டிருந்தது. அந்த லாரிகள் நேற்று பகல் 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. தற்போது தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் சோதனை சாவடி அருகே 6 லாரிகளும் ஒரே நேரத்தில் சென்றதால் அந்த இடத்தில் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக திரும்ப முடியாமல் நின்றன.

இதனால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் காவிரி ஆற்று பாலத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு காற்றாலை மின்விசிறிகளை கொண்டு சென்ற லாரிகள் மிகவும் மெதுவாக சோதனை சாவடி வழியாக வளைந்து நெளிந்து ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

கோரிக்கை

காற்றாலை மின்விசிறிகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்துவிட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு மேல் இந்த சாலை வழியாக செல்கின்றன. பகல் நேரங்களில் இந்த வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காற்றாலை மின்விசிறிகளை கொண்டு செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் கொண்டு செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்