காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் - 276 வழக்குகளுக்கு தீர்வு
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 276 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக் அதாலத் நடந்தது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சிவஞானம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள் திருஞானசம்பந்தம், சரண்யா செல்வம், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கயல்விழி வரவேற்று பேசினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களான திருவள்ளூரை சேர்ந்த கிரிதரன் (39) குடும்பத்தினரிடம் இழப்பீட்டு தொகையாக ரூ.73 லட்சத்துக்கான காசோலையும், அனுமன் தண்டலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் (44) குடும்பத்தினரிடம் ரூ.47.74 லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சிவஞானம் வழங்கினார்.
லோக் அதாலத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் வழக்கு உட்பட மொத்தம் 276 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 இழப்பீட்டுத்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் சத்தியமூர்த்தி, வக்கீல்கள் சுப்பிரமணி, கார்த்திகேயன், துரைமுருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.