< Back
மாநில செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் நடக்கிறது

தினத்தந்தி
|
6 July 2023 12:30 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

மாவட்ட அளவில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வரை சிறப்பு அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றங்களில் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெறும்.

சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு சமரச தீர்வு காணப்படும்.

காசோலை மோசடி வழக்குகள்

இதேபோல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாரா கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்