திருவள்ளூர்
திருத்தணி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
|திருத்தணி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்கள் திருடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக வெங்கடேசன் வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ந் தேதி இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் காலை கடையை திறக்க அவர்கள் வந்தனர், அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கடைக்குள் சென்று பார்த்த போது, அங்கு இருந்த 14 மது பாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொள்ளையர்கள் பணம் வைக்கபட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர், ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் கோபத்தில் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து கடையின் மேலாளர் வெங்கடேசன் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் மற்றும் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.