வேலூர்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து திருட்டு
|குடியாத்தம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது.
குடியாத்தம் தரணம்பேட்டை தங்கள ராமசாமி செட்டி தெருவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் சங்கத்தை பூட்டிக் கொண்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது சங்கத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது பணம் வைக்கும் மேசை டிராயர் உடைக்கப்பட்டு அதிலிருந்து 51 ஆயிரத்து 800 ரூபாய் மற்றும் ஒரு மின் விசிறி திருட்டு போயிருந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.