தேனி
உப்பார்பட்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடக்கம் பணிகள்: முடியும் முன்பே திறந்ததால் மக்கள் அதிருப்தி
|தேனி அருகே உப்பார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடங்கியது. பணிகள் முடியும் முன்பே திறக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உப்பார்பட்டி சுங்கச்சாவடி
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி அருகே உப்பார்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேனி அருகே குன்னூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உப்பார்பட்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அக்டோபர் 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த சுங்கச்சாவடி நேற்று அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் பணி தொடங்கியது. இந்த சுங்கச் சாவடியில் வாகனங்களின் வகைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கட்டணம் வசூல்
ஒருமுறை மட்டும் கடந்து செல்வது, கட்டணம் செலுத்திய நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் திரும்பி பயணித்தல், ஒரு மாதத்தில் 50 முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர அனுமதிச் சீட்டு கட்டணம், சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒரு வழி பயணத்துக்கான கட்டணம் என தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டும் பயணிக்க கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.50, இலகுரக வணிக வாகனங்கள், இலசு பொருள் வாகனம் அல்லது மினிபஸ் போன்றவற்றுக்கு ரூ.85, பஸ் அல்லது 2 அச்சு டிரக் வாகனங்களுக்கு ரூ.175, 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.195, 4 முதல் 6 அச்சுகள் கொண்ட கட்டுமான எந்திரங்கள், மண் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.275, 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.340 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வணிக பயன்பாடு அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர அனுமதி கட்டணம் ரூ.315 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர கட்டணத்துக்கான அனுமதிச்சீட்டு சுங்கச்சாவடி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
மக்கள் அதிருப்தி
இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ள திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தேனி அருகே பூதிப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் சில இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் முன்பே கட்டணம் வசூல் தொடங்கப்பட்டுள்ளது மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்த சுங்க கட்டணம் வசூல் எதிரொலியாக தேனியில் தனியார் பஸ் டிக்கெட் கட்டணம், சுற்றுலா மற்றும் வணிக வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.