< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா:  நாமக்கல் மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை  கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: நாமக்கல் மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு

தினத்தந்தி
|
29 July 2022 9:36 PM IST

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூலிகை செடி கண்காட்சி

கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம், கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, மூலிகை செடி கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.

வங்கிகளுக்கு பொருந்தாது

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் அதை ஈடுசெய்யும் வகையில் 27-ந் தேதியன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் 3-ந் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். மேலும் இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. எனவே கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்