கோட் படத்திற்கு பிளக்ஸ், பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகலாம் - மதுரை ஐகோர்ட்டு
|கோட் படத்திற்கு பிளக்ஸ், பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகலாம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
தேனி,
தேனியை சேர்ந்தவரும், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவருமான லெப்ட் பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலும் இந்த படம் வெளியாகிறது. எங்கள் பகுதியில் உள்ள 3 தியேட்டர்கள் முன்பாக பிளக்ஸ் பேனர் மற்றும் ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக அனுமதி கோரி கடந்த மாதம் 22-ந்தேதி போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே கோட் சினிமா வெளியாகும் தியேட்டர்கள் முன்பு பிளக்ஸ், பேனர்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்க அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பேனர்கள் வைக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தை மட்டுமே அணுக முடியும் என தெரிவித்தார்.இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.