திருவள்ளூர்
கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி - கலெக்டர் தகவல்
|திருவள்ளூர் மாவட்டத்தில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் பார்சிக்கள் போன்ற சிறுபான்மையினத்தை சேர்ந்த கைத்தறி மற்றும் கைவினைபொருட்கள் செய்யும் ஏழ்மையான கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகம் மூலம் செயல்பாட்டில் உள்ள விராசத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
திட்ட வரம்பு 1-ன் படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாய் இருப்பின் ரூ.98 ஆயிரம் மற்றும் நகர்புறமாய் இருப்பின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருத்தல் வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் பெண்களுக்கு 4 சதவீதம் மற்றும் ஆண்களுக்கு 5 சதவீதம் கணக்கிடப்பட்டு 5 ஆண்டுக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேற்படி கைவினை கலைஞர்களுக்கான கடன் உதவி திட்ட வரம்பு 1-ன் கீழ் பயன் பெற முடியாத மற்றும் ஆண்டு வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும்.
ஆண்டு வட்டி விகிதம் பெண்களுக்கு 5 சதவீதம் மற்றும் ஆண்களுக்கு 6 சதவீதம் கணக்கிடப்படும். 5 ஆண்டுக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும்.
எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியான விண்ணப்பங்கள் டாம்கோ நிறுவனத்திற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.