கள்ளக்குறிச்சி
1,599 பேருக்கு ரூ.86¼ கோடி கடனுதவி
|கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமில் 1,599 பேருக்கு மொத்தம் ரூ.86¼ கோடி கடனுதவியை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் வங்கி,அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர்ராவ், மாவட்ட திட்ட இயக்குனர் (ஊரகவளர்ச்சி) மணி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 1,599 பயனாளிகளுக்கு ரூ.86 கோடியே 41 லட்சம் மதிப்பில் கடனுதவியை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில் கடன் கேட்டு பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கு முன் திட்டத்தின் தகுதிகள், மானிய விகிதம், எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒத்துழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.4,348 கோடி கடனுதவி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.6,115 கோடி கடனுதவி வழங்கி இலக்கினை அடைந்துள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் ரூ.4,811 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.5,787 கோடி வழங்கி இலக்கினை அடைந்துள்ளோம். வேளாண்மைத்துறை சார்ந்த கடனுதவிகளுக்கு ரூ.3,352 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் ரூ.5,192 கோடி வழங்கி இலக்கினை எய்தியுள்ளோம். இந்த நிதியாண்டிற்கு கடன் இலக்கினை எய்திட ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கி அலுவலர்களுடன் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4,500 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த இலக்கினை அடைய முடியும்.
கடந்த நிதியாண்டில் பிரதம மந்திரி வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.564 லட்சமும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5,064 லட்சமும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.184 கோடியும், தாட்கோ மூலம் ரூ.84 லட்சமும், உணவக தொழில்களில் ரூ.86 லட்சமும், சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.494 கோடியும் கடனுதவி வழங்கி சாதனை படைத்துள்ளோம்.
அதிக பயனாளிகளுக்கு கடனுதவி
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் திட்டத்தின்கீழ் அதிக பயனாளிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்பது இந்த நிதியாண்டின் நோக்கமாகும். மேலும் இந்த நிதியாண்டில் ஏழை, எளிய தொழில் முனைவோருக்கு தனி கவனம் செலுத்தி கடனுதவிகள் வழங்க வேண்டும். 2022-2023-ம் நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்திட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கி மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, நகராட்சி ஆணையர் குமரன், கனரா வங்கி பிரிவு மேலாளர் கண்ணதாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மண்டல மேலாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் சுதர்சனன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் வங்கி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன் நன்றி கூறினார்.