அரியலூர்
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
|நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கைத்தறி நெசவாளர்களையும், நெசவு தொழிலையும் பாதுகாத்திட தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருபுவனம் சம்மேலன கைத்தறி சங்க துணைத் தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நெசவாளர்களுக்கு போனஸ் கிடைக்க ஆவனம் செய்ய வேண்டும். கல்வி, திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 2 மடங்காக உயர்த்தியும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல அனைத்து சலுகைகளையும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து குடிசை தொழிலாளர், கைத்தறி தொழிலை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும். நலவாரியம் மூலம் சென்ற ஆண்டு போல் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும். பொங்கல் பொருளாக அரிசி, பருப்பு, கரும்பு, வெள்ளம் மற்றும் வேட்டி, சேலை வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்தபட்சம் கூலி மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்க சட்ட திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும். நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்கி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சி.பி.எம். மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.