விழுப்புரம்
விழுப்புரத்தில் லோன் மேளா
|கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் சார்பில் விழுப்புரத்தில் வருகிற 18-ந் தேதி லோன் மேளா நடக்கிறது.
விழுப்புரம்
லோன் மேளா
2023-24-ம் ஆண்டுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னுரிமை கடன் பிரிவில் ரூ.15 ஆயிரத்து 283 கோடியே 16 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் கடன் ரூ.12 ஆயிரத்து 417 கோடியே 92 லட்சம், எம்.எஸ்.எம்.ஈ. தொழிற்கடன் ரூ.2 ஆயிரத்து 483 கோடியே 13 லட்சம், கல்விக்கடன் உள்ளிட்ட பிற முன்னுரிமைக்கடன் ரூ.382 கோடியே 11 லட்சம் ஆகும்.
எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனங்கள் ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்களிப்பதாகவும் உள்ளதால் இவற்றின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு, மாவட்ட கலெக்டர் தலைமையில் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வேளாண் துறை, கால்நடைத்துறை, தாட்கோ ஆகியவற்றை ஒருங்கிணைத்து காலாண்டுக்கு ஒருமுறை கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் என்னும் லோன் மேளா நடத்த வேண்டுமென மாவட்ட தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
18-ந் தேதி
அதன்படி விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சோலைவாழியம்மன் திருமண மண்டபத்தில் வருகிற 18-ந் தேதியன்று நடைபெறும் நிகழ்வில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அரசுத்துறைகள் உதவி மையங்களை அமைக்கவுள்ளன. அங்கு அவை தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானியத்திட்டங்கள், அவற்றைப்பெறும் முறைகள் குறித்த விளக்க பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆர்வமுள்ளோர், தேவையான வழிகாட்டுதல், விளக்கங்களை பெறலாம். கடன் கோரி விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பரிசீலிக்கவும் வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், வணிகர்கள், இளைஞர் மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாடு, தகுதியும் வாய்ப்புமுள்ள தொழில், வணிக திட்டங்களை கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல், நிர்வகித்தல், நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருத்தல், சந்தைப்படுத்தல், ஏற்றுமதி உள்ளிட்ட தொழில், வணிகம் தொடர்பான அத்தனை விஷயங்கள் குறித்தும் முறையான தகவலும் தெளிவும் பெறலாம்.
மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 9443728015 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.