< Back
மாநில செய்திகள்
பாப்பாபட்டியில் ரூ.7 கோடி மதிப்பில் கடனுதவி
மதுரை
மாநில செய்திகள்

பாப்பாபட்டியில் ரூ.7 கோடி மதிப்பில் கடனுதவி

தினத்தந்தி
|
23 July 2022 3:21 AM IST

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பாப்பாபட்டியில் கிராமிய திருவிழா நடந்தது. இதில் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.

உசிலம்பட்டி,

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பாப்பாபட்டியில் கிராமிய திருவிழா நடந்தது. இதில் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கிராமிய திருவிழா

உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் வாலாந்தூர் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் கிராமிய திருவிழா நடைபெற்றது. இதற்கு சென்னை வட்டார தலைமை பொது மேலாளர் ராமகிருஷ்ணா தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் மோகன்பாபு வரவேற்று பேசினார்.

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், பாப்பாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வாலாந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக பாப்பாபட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய ஏ.டி.எம். மையத்தை மாவட்ட கலெக்டரும் வங்கி அதிகாரிகளும் திறந்து வைத்தனர்.

600 கிராமங்கள் தேர்வு

அதன் பின்னர் அவர்கள் பாப்பாபட்டியில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயை திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா பேசும் போது, இந்தியாவில் மொத்தம் 22 ஆயிரம் பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் உள்ளன. இதில் 66 சதவீதம் கிளைகள் கிராமப்புறத்தை சார்ந்து உள்ளது. காரணம் பாரத ஸ்டேட் வங்கியின் சேவை கிராம புறத்தில் உள்ள ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நம் நாட்டில் இந்த ஆண்டு 600 கிராமங்களை தேர்வு செய்து அங்கு கிராமிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

ரூ.7 கோடி மதிப்பில்...

அதன் பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டிக்கு வந்தது சிறப்பு அம்சமாகும். அவர் வந்த போது வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பாப்பாபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு, பால் மாடு வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் ரூ.7 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கடன் உதவிக்கான காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வாலாந்தூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை துணை மேலாளர் சின்ன பாண்டியன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்