விழுப்புரம்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் முகாம்
|கூட்டுறவு வங்கிகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளான விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் வருகிற 17-ந் தேதியும், திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியில் 18-ந் தேதியும், வானூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 22-ந் தேதியும், விக்கிரவாண்டி தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 24-ந் தேதியும், மரக்காணம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 25-ந் தேதியும், செஞ்சி தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 29-ந் தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
விண்ணப்பங்கள்
இந்த கடன் விண்ணப்பங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கப்பெறும். முகாமில் கலந்துகொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பெற்று பூர்த்தி செய்து எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.